நடராஜன் இருந்தாலும் வெற்றி பெற்றிருக்க மாட்டோம் - பயிற்சியாளர் பரபரப்பு பேச்சு
சன்ரைசா்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஹைதராபாத் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. ஒரு வீரர் கூட 30 ரன்களைத் தொடவில்லை.
டெல்லி அணி 17.5 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வென்றது. ஷிகர் தவன் 42 ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 47 ரன்களும் எடுத்தார்கள்.
இந்த வெற்றியினால் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளது டெல்லி அணி. ஹைதராபாத் அணி தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில் தோல்வி பற்றி சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் கூறியதாவது: நடராஜன் விளையாடியிருந்தால் ஆட்டத்தின் முடிவில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. தில்லி அணி மிகச்சிறப்பாக விளையாடினார்கள்.
நடராஜன் விளையாடாததால் சிறிது வருத்தம் ஏற்பட்டது. ஆனால் அணி வீரர்களும் அனைவரும் தொழில்முறையில் விளையாடுபவர்கள். ஆட்டம் தொடங்கும் முன்பு காயம் ஏற்பட்டால் வீரரை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கும்.
எனவே இந்த மாற்றம் வீரர்களுக்குப் பழகியிருக்கும் என்றார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவர் 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.