என்ன அணில் மின் தடை ஏற்படுத்துமா? சர்ச்சைகளுக்கு ஆதாரங்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சின்ன சின்ன மின்வெட்டு நடப்பதற்கு என்ன காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு இருந்தார்.
இதில் அணில்கள் குறித்து செந்தில்பாலாஜி குறிப்பிட்ட விஷயம் வைரலாகி வருகின்றது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில ஊர்களில் அவ்வப்போது 5 நிமிடம், 10 நிமிடம் என்று மின்சார தடை ஏற்படுகிறது.
சில மாவட்டங்களில் மின் தடை பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்னொரு சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படும் இந்த சிறிய அளவிலான மின்தடைக்கு என்ன காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
இதில் மின்வெட்டு பிரச்சனையை சரி செய்து வருகிறோம் என்றும் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின் முந்தைய தமிழக அரசு பராமரிப்பு பணிகளை முறையாக செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அணில்கள் மரக்கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின்கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விளக்கம் சர்ச்சையாக மாறி எது அணில் மின் தடை ஏற்படுத்துமா என பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் எப்படி அணில் மின் தடை ஏற்படுத்தும் என கிண்டல் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் கொந்தளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, புகைப்பட ஆதாரத்துடன் விளக்கம் அளித்து ட்வீட் செய்துள்ளார். இதில், அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களின் வாயை அடைத்த அமைச்சர் பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது என்றும் களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள், எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.