‘எங்களை காப்பாத்துங்க’ - போலீசுக்கு சென்ற எஸ்.பி.வேலுமணி சகோதரர்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மோசடி புகார் அளித்த மாநகராட்சி ஒப்பந்ததாரர் திருவேங்கடம் தன்னை மிரட்டுவதாக எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம். தாமோரைச் சந்தித்து எஸ். பி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் ஒரு புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில் கோவை புதூரை சேர்ந்த திருவேங்கடம் என்ற நபர் தனது தொழில் நொடிந்து விட்டதாகவும், மனைவியின் நகை சொத்துக்களையெல்லாம் அடமானம் வைத்து நஷ்டம் அடைந்ததாகவும் சொல்லி புலம்பியதோடு ரூ.5 லட்சம் என்னிடம் கடனாக கேட்டார்.
இதனால் சொந்த ஜாமீனில் நான் எனக்கு தெரிந்த நண்பரிடம் திருவேங்கடத்திற்கு ஐந்து லட்சம் கடன் பெற்றுக்கொடுத்தேன். இதன் பின்னர் பத்திரிகை நிருபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு திருவேங்கடம் சொன்னதாக சொல்லி என்னை பற்றி செய்தி வெளியிட போவதாக குறுஞ்செய்தி அனுப்பினார்.
அதன்பின்னர் திருவேங்கடம் என்னை தொடர்பு கொண்டு ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொடுத்தால் இதை தடுத்து நிறுத்தி விடுவதாக மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.அதனால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் மனுவில் எஸ்.பி.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
புகாரில் குறிப்பிடப்பட்ட திருவேங்கடம் தான் சில தினங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது அரசு ஒப்பந்தப் பணிகள் தருவதாக கூறி ரூபாய் 1.20 கோடி வாங்கி கொண்ட மோசடி செய்ததாக புகார் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.