சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி: சோதனை முயற்சி தொடக்கம்
ரஷ்யாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
கொரோனா முதல் மற்றும் 2வது அலை தாக்கம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு தடுப்பூசி ஒன்றே தற்காலிக தீர்வு என்ற நிலையில் 18 வயதுக்கு மேல் உள்ள மக்களுக்கு செலுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே கொரோனாவின் அடுத்தடுத்த அலை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இதற்காக பல தடுப்பூசிகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் பைசர் போன்ற தடுப்பூசிகள் ஏற்கனவே சிறுவர்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் உலகளவில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசியான ரஷியாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி அந்நாட்டில் சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கி உள்ளது.
இதற்காக 12 முதல் 17 வயது வரையிலான 100 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் நேற்று கொரோனா பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.