இந்தியாவில் ஸ்புட்நிக் வி தடுப்பூசி உற்பத்தி எப்போது தொடங்குகிறது?
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்புகள் கடந்த சில தினங்களாக குறைந்து வந்தாலும் தினசரி மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் விரைந்து கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால் இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போதாத நிலை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு இந்தியாவிலும் அனுமதி வழங்கும் முடிவை மத்திய அரசு எடுத்தது.
அதன்படி ரஷ்யாவின் ஸ்புட்நிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விரைந்து அனுமதி வழங்கப்பட்டது.முதலில் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு பிறகு இந்தியாவிலே தடுப்பூசி தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் கட்ட ஸ்புட்நிக் வி தடுப்பூசி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தது. இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஸ்புட்நிக் வி தடுப்பூசியை இறக்குமதி செய்கிறது.
தற்போது வரை 2 லட்சம் ஸ்புட்நிக் வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்துள்ள நிலையில் விரைவில் 30 லட்சம் தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட இருப்பதாக ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு மூன்று கட்டங்களாக இந்தியாவில் 85 கோடி ஸ்புட்நிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட இருக்கிறது. இதன் முதல் கட்ட உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது ஸ்புட்நிக் தடுப்பூசி 995 ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.