தமிழகத்தில் தாண்டவமாடும் உண்ணி காய்ச்சல்; உயிரிழப்பிற்கும் வாய்ப்பு - மக்களே கவனம்!
உண்ணிக்காய்ச்சல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்ணிக்காய்ச்சல்
திண்டுக்கல் பகுதியில் இதுவரை 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் வேடந்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்துர் உள்ளிட்ட பகுதிகளிலும் உண்ணி காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோருக்கு உண்ணிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் அபாயம்
உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தசை வலி, வாந்தி, தொண்டைப் புண் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளது.
ஒட்டுண்ணிகள் போல் வாழும் ஒருவகை பூச்சிகள் கடிப்பதால், உண்ணிக்காய்ச்சல் ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிரிழப்பே கூட ஏற்படும் அபாயம் உள்ளது.
முன்னதாக, குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (61), ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் இருவர் உண்ணி காய்ச்சலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.