மும்பை டெஸ்ட்டில் நிச்சயம் ஷ்ரேயஸ் அய்யர் நீக்கப்படுவார் - வி.வி.எஸ் லஷ்மண் சொன்ன அதிர்ச்சித் தகவல்
மும்பையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கோலி திரும்பி வருகிறார். இதனால் யார் அணியில் இருக்க மாட்டார் என்று பல ஊகங்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், கான்பூர் டெஸ்ட்டில் சதமும், அரைசதமும் விளாசி வரலாறு படைத்த ஷ்ரேயஸ் அய்யர்தான் பலிகடா ஆக்கப்படுவார் என்று விவிஎஸ் லஷ்மண் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டிருக்கிறார்.
அஜிங்கிய ரகானே 35 மற்றும் 4 , அகர்வால் 13 - 17., புஜாரா 26, 22. இதில் யாரை வேண்டுமானாலும் கோலிக்காக உட்கார வைக்கலாம், ஆனால் ஷ்ரேயஸ் அய்யர் உட்கார வைக்கப்படுவார் என்று ரசிகர்கள் இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சி இருக்கிறார் விவிஎஸ் லஷ்மண். ராகுல் திராவிடும், விராட் கோலியும் ரகானேவை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்கிறார் லஷ்மண். அவர் கூறுவதில் ஒரு விஷயம் இருக்கிறது.
பொதுவாக ஒரு வீரருக்கு பதிலாகக் கொண்டு வரப்படும் புதிய வீரர் என்னதான் சதமெடுத்தாலும் அந்த பழைய வீரர் திரும்பும்போது புதிய வீரர்தான் வழி விடவேண்டும். இது கிரிக்கெட்டின் எழுதப்படாத மரபாக உள்ளது. சச்சின் டெண்டுல்கர் இல்லாத போது ராபின் உத்தப்பா ஓபனிங்கில் இறங்கி சதமெடுக்கலாம். ஆனால் சச்சின் வந்தால் அவருக்கு உத்தப்பா வழிவிட்டுத்தான் ஆகவேண்டும்.
இது குறித்து லஷ்மண் கூறியதாவது -
மும்பையில் யாராவது ஒருவர் நல்ல பார்மில் இருப்பவர் ஆட வேண்டும். ஆனால், எழுதப்படாத விதி என்னவெனில் ஓய்வு அல்லது காயம் காரணமாக சீனியர் வீரர் ஆடாத இடத்தில் புது வீரர் ஆடினால் அவர்தான் சீனியர் வீரர் மீண்டும் வரும்போது வழிவிட வேண்டும். ரஹானேவுக்கு இன்னுமொரு வாய்ப்பு மும்பையில் வழங்கப்படும். ராகுல் திராவிடும், கோலியும் ரஹானேவை நீக்குவார்கள் என்று நாம் நம்பவில்லை.
இதனால், அருமையான அறிமுக டெஸ்ட் கண்ட ஷ்ரேயஸ் அய்யர் தலையில்தான் கத்தி விழும். இது துரதிர்ஷ்டமானதுதான். ஆனால், இந்திய கிரிக்கெட்டில் இதுதான் எழுதப்படாத விதி இவ்வாறு அவர் கூறினார்.