ஷமிக்கு ‘வார்னிங்’ கொடுத்த அம்பயர் - கடுப்பாகி ‘சண்டை’ போட்ட விராட் கோலி.. - நடந்தது என்ன?
முகமது ஷமிக்காக அம்பயரிடம் விராட் கோலி வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79 ரன்களும், புஜாரா 43 ரன்களும் எடுத்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை ரபாடா 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும், மகாராஜ், லுங்கி நிகிடி மற்றும் ஒலிவியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனையடுத்து, தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணியை பொறுத்தவரை பும்ரா 5 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இந்திய அணி தங்களது 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகின்றது. இந்நிலையில் அம்பயரிடம் விராட் கோலி கோபமாக வாக்குவாதம் செய்தது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பந்து வீசும்போது டேஞ்சர் ஜோன் பகுதியில் கால் வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, ஸ்டம்புக்கு நேராக இருக்கும் மையப் பகுதியை டேஞ்சர் ஜோன் என்று சொல்வார்கள்.
இதைப் பார்த்த அம்பயர் முகமது ஷமி அழைத்து எச்சரிக்கை விடுத்தார். இதுபோன்று மீண்டும் 2 முறை அவரை அழைத்து அம்பயர் எச்சரிக்கை செய்தது விராட்கோலி அதிருப்தி அடைய வைத்தது.
உடனே நேராக அம்பயரிடம் சென்று விராட் கோலி இதுகுறித்து வாக்குவாதம் செய்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், உண்மையில் முகமது ஷமி டேஞ்சர் ஜோன் பகுதியில் கால் வைத்தது வீடியோவில் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Erasmus gives a official warning to Shami for running in danger zone#INDvSA #Cricket #Shami pic.twitter.com/94790SQTCr
— Pushkar Pushp (@ppushp7) January 12, 2022