‘என் மீது வைக்கும் விமர்சனம் குறித்து எனக்கு கவலையே இல்லை..’ - விராட் கோலி பேட்டி

sports-cricket virat kohli interview
By Nandhini Jan 11, 2022 06:59 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி கேப்டவுனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது -

நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். எனது பார்ம் குறித்து மக்கள் பேசுவது இது புதிது கிடையாது. இதற்கு முன்பும் இதேபோல் சில முறை விமர்சனத்தை சந்தித்துள்ளேன். எனது ஆட்டம் குறித்து வெளியிலிருந்து வரும் விமர்சனம் குறித்து நான் கவலைப்படமாட்டேன்.

தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன். எனது ஆட்ட திறமையை இன்னும் யாருக்கும் நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் கிடையாது.

தசைப்பிடிப்பு காயத்திலிருந்து முகமது சிராஜ் தேறி வருகிறார். அவர் இன்னும் போதிய உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை கடைசி டெஸ்ட் போட்டியில் களம் இறக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

அணியில் இருக்கும் எல்லோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதனால் சிராஜிக்கு பதிலாக யாரை களம் இறக்குவது என்பதை முடிவு செய்வது கடினம். இது குறித்து தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை கேப்டனிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் மதிப்பும், அவர் அணிக்கு அளித்த பங்களிப்பும் எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த இடத்தை அஸ்வின் சரியாக நிரப்பிக்கொண்டு வருகிறார். ஆஸ்திரேலிய பயணத்திலிருந்து அஸ்வின் வெளிநாட்டு மண்ணில் குறிப்பாக பந்து வீச்சில் சிறப்பான முன்னேற்றமடைந்துள்ளார். கடந்த டெஸ்டில் அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அணிக்கு பயனுள்ள பங்களிப்பை கொடுத்தார்.

அவரால் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக செயல்பட முடியும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் லோகேஷ் ராகுல் கேப்டன் பணியை நேர்த்தியாக செய்துள்ளார்.

கேப்டன் பதவியில் ஒவ்வொருவரின் அணுகுமுறையும் வித்தியாசமானதாக இருக்கும். ரஹானே, புஜாரா விஷயத்தில் அழுத்தம் காரணமாக மாற்றம் செய்வது என்பது சரியானதாக இருக்காது. அணியின் வீரர்கள் மாற்றம் என்பது இயற்கையாக நிகழ வேண்டும். எல்லோரும் தவறு இழைப்பது இயற்கை தான். ஆனால் செய்த தவறை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக முக்கியமாம்.

அத்துடன் செய்த தவறை குறைந்தபட்சம் அடுத்த 6-7 மாதத்துக்குள் மீண்டும் செய்யக்கூடாது. இது எனக்கு டோனி தொடக்க கால கட்டத்தில் அளித்த ஆலோசனை. அதனை எப்போதும் மனதில் வைத்து செயல்பட்டு வருகிறேன்.

ரிஷாப் பண்ட் தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவார். கடந்த ஆட்டத்தில் அவர் ஷாட் ஆடியதில் செய்த தவறை மீண்டும் செய்யமாட்டார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.