Friday, May 16, 2025

‘அய்யோ... உங்களால எனக்கு நெஞ்சு வலியே வந்திடும் போல...’ புலம்பிய அம்பயர் - வைரலாகும் வீடியோ

viral video umpire sports-cricket
By Nandhini 3 years ago
Report

பரபரப்பாக நடந்து வரும் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் போது போட்டி நடுவர் விளையாட்டாக புலம்பிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 2 அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 50 ரன்களும், அஸ்வின் 46 ரன்களும் எடுத்தார்கள்.

இதன் பின்பு, முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பீட்டர்சன் 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரஹானே 58 ரன்களும், புஜாரா 53 ரன்களும், இறுதி வரை போராடிய ஹனுமா விஹாரி 40* ரன்களும் எடுத்து கொடுத்தாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொல்லி கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் 266 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

2 அணிகளுமே இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இரு அணி வீரர்களும் அடிக்கடி ஒருவரை ஒருவர் வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான இப்போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என உத்வேகத்தோடு விளையாடும் இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவரின் போது நடுவரிடம் முறையீடு செய்தார்கள்.

இதை நகைச்சுவையாக குறிப்பிட்ட தென்னாப்பிரிக்க நடுவர் எராஸ்மஸ், இந்திய வீரர்கள் தனக்கு நெஞ்சடைப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். அம்பயர் விளையாட்டாக புலம்பும் இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.