சாதனை மேல் சாதனை… ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஷர்துல் தாகூர் - குவியும் பாராட்டு
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஷர்துல் தாகூர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடந்து வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பின்பு, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 50 ரன்களும், ரவிச்சந்திர அஸ்வின் 46 ரன்களும் எடுத்தார்கள். இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
அறிமுக வீரரான பீட்டர்சன் 62 ரன்களும், சீனியர் வீரர் டெம்பா பவுமா 51 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 79.4 ஓவரில் 229 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்நிலையில், இந்த இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அசத்திய இந்திய அணியின் ஷர்துல் தாகூர், இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். 7/61 என்ற ஷர்துல் தாகூரின் பவுலிங் தான் தென்னாப்பிரிக்காவில் ஒரு இந்திய பவுலரின் மிகச்சிறந்த ஸ்பெல்.
இதற்கு முன்பாக 2010-2011 சுற்றுப்பயணத்தில் கேப்டவுனில் ஹர்பஜன் சிங்கின் 7/120 என்ற ஸ்பெல் தான் தென்னாப்பிரிக்காவில் இந்திய பவுலரின் சிறந்த பவுலிங்காக இருந்தது.
ஹர்பஜன் சிங்கின் அந்த சாதனையை தகர்த்துள்ளார் ஷர்துல் தாகூர். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய பவுலரின் சிறந்த பவுலிங் ரெக்கார்டை தன்னகத்தே கொண்டிருந்த அஷ்வினை (7/66) பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஷர்துல் தாகூர் (7/61).
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் அமைந்துள்ள வாண்டெரெர்ஸ் மைதானத்தில் சிறந்த பவுலிங்கை வைத்திருந்த இங்கிலாந்தின் மேத்யூ ஹாக்கார்டு (7/61) என்ற வீரரின் சாதனையை சமன் செய்திருக்கிறார் ஷர்துல் தாகூர் (7/61).