அப்பா என்னை சைக்கிளிலேயே 30 கிமீ கடந்து பயிற்சிக்கு அழைத்துச் செல்வார்... - ஷமி உருக்கமான பேட்டி
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை குறைந்த இன்னிங்ஸ்களில் எட்டிய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தவர் மொகமட் ஷமி. இவர் தன் வளர்ச்சியில் தன் தந்தையின் உழைப்பை பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மொகமட் ஷமி பேசியதாவது -
நான் இன்று இப்படி உங்கள் முன்னால் இருப்பதற்கு என் தந்தைதான் காரணம். நான் பிறந்தது ஒரு கிராமத்தில். அங்கு கிரிக்கெட் பயிற்சிக்கான வசதிகள் எதுவும் கிடையாது. இன்று கூட பெரிய வசதிகள் அங்கு கிடையாது. கிராமத்தில் இருந்த என்னை பயிற்சி முகாமிற்கு என் தந்தை 30 கிமீ சைக்கிளிலேயே கூட்டிக் கொண்டு செல்வார்.
இன்றும் எனக்கு அவர் பட்ட கஷ்டம் நினைவில் உள்ளது. அந்த நாட்களில், அந்தக் காலக்கட்டத்தில் என் மீது அவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்தார்.
கிரிக்கெட் வீரனாக என் மீது முதலீடு செய்த அவர்களை என்றென்றைக்கும் நான் மறக்கவே மாட்டேன். இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அதுவும் நாம் டிவியில் பார்த்து மகிழ்ந்த வீரர்களுடன் ஆட வேண்டும் என்பதுதான்.
ஒருவர் என்ன சாதிக்க முடியும் என்பதை கனவு காண்பது கடினம். ஏனெனில் படிமுறையில் மேலேறி வந்து அடையாளம் பதிப்பது கடினமான காரியம். நாம் என்ன செய்ய முடியும்? கடின உழைப்பை செலுத்த வேண்டும்.
கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். டெஸ்ட் மேட்ச் பவுலிங் என்பது ஒன்றும் ராக்கெட் அறிவியல் கிடையாது. டெஸ்ட் பவுலராக வேண்டுமெனில் நாம் வீசும் லெந்த்தை சரியாக அறிய வேண்டும். என்ன மாதிரியான பிட்ச், சூழ்நிலையில் ஆடுகிறோம் என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருக்கமாக ஷமி பேசினார்.
நேற்று 3ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 197 ரன்களுக்கு மடிந்தது. இந்திய அணியில் முகமது ஷமி தன் 55-வது டெஸ்ட்டில் 200 விக்கெட்டுகளைச் சாய்த்து மைல்கல்லை எட்டியுள்ளார்.