இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் - ரோகித்தை பின்னுக்குத் தள்ளிய கே.எல்.ராகுல்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு?

new captain sports-cricket rohit or K.L.Rahul India team
By Nandhini Jan 17, 2022 06:58 AM GMT
Report

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்து வலம் வந்துக் கொண்டிருந்தார் விராட்கோலி. தென்னாப்பிரிக்க தொடரில் ஏற்பட்ட தோல்வியால், திடீரென்று அவர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது இந்த அறிவிப்பால் இந்திய ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எந்தவொரு ஐ.சி.சி. கோப்பையையும் கோலி வென்று தராவிட்டாலும், இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாகவே கோலி வலம் வந்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், அவரது ராஜினாமா இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பு வகிக்கும் நிலையில், இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

ஏற்கெனவே இந்த தொடரில் இடம்பெற்றிருந்த ரோகித்சர்மா காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்தே விலகி உள்ளார். இந்நிலையில், அவருக்கு பதிலாக துணை கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுலிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரோகித்சர்மாவை கேப்டனாக நியமிக்க பலரும் விருப்பம் தெரிவித்து வந்தாலும், இந்திய அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், ரோகித்சர்மாவிற்கு அடிக்கடி ஏற்படும் காயம் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விராட்கோலிக்கு பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித்சர்மாவிற்கு அனைத்து தகுதிகள் இருந்தாலும் அவருக்கு தற்போது 34 வயதாகி விட்டது. ஆனால், கே.எல்.ராகுலுக்கு தற்போதுதான் 29 வயதாகிறது.

அதுமட்டுமின்றி, இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடி வரும் கே.எல்.ராகுல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், ஐ.பி.எல். போட்டிகளில் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பு வகித்த அனுபவமும் கே.எல்.ராகுலுக்கு இருக்கிறது. ரோகித்சர்மா காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய காரணத்தால், அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ரஹானேவை தற்போதுதான் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து கீழே இறக்கியதாலும், புஜாராவிற்கும் 30 வயதிற்கு மேல் ஆகுவதாலும் இளம் வீரரையே கேப்டனாக நியமிக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து, பி.சி.சி.ஐ. தலைவர் சவ்ரவ் கங்குலி, பயிற்சியாளர் ராகுல்டிராவிட் உள்ளிட்ட பலரும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

29 வயதே ஆன கே.எல்.ராகுல் இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 547 ரன்களை குவித்திருக்கிறார். அவற்றில் 7 சதங்களும், 13 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 199 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்திருக்கிறார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த பெருமையும் கே.எல்.ராகுலுக்கு இருக்கிறது.