சர்வசேத கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன் - பாகிஸ்தான் வீரர் அறிவிப்பு - ரசிகர்கள் சோகம்

sports-cricket Mohammad Hafeez's
By Nandhini Jan 03, 2022 07:48 AM GMT
Report

சர்வசேத கிரிக்கெட் போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வீர‌ர் முகமது ஹஃபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வாழ்க்கைக்கு தற்போது அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இருந்தாலும், அவர் தொடர்ந்து டி-20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டியில் முகமது ஹபீஸ் அறிமுகமானார்.

கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 உலகக் கோப்பை அரையிறுதியில் தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். 2020ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பை தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று அவர் ஆரம்பத்தில் அறிவித்தார். ஆனால், கொரோனா காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, உலகக்கோப்பை தொடர் தற்போது முடிவடைந்துள்ளதால், சர்வதேச போட்டியிலிருந்து விடைபெறுவதாக அறிவித்திருக்கிறார்.

முகமது ஹபீஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 119 டி20 போட்டிகளில் விளையாடி 12,780 ரன்களையும், 253 விக்கெட்டுகளையும் குவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், இன்று நான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பெருமையுடனும் திருப்தியுடனும் விடைபெறுகிறேன். உண்மையில், நான் ஆரம்பத்தில் நினைத்ததை விட அதிகமாக சம்பாதித்து சாதித்துள்ளேன். அதற்காக எனது சக கிரிக்கெட் வீரர்கள், கேப்டன்கள், துணை ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 18 ஆண்டுகளாக பாகிஸ்தான் தேசிய கிட் அணிவதற்கு தகுதியானவராக கருதப்பட்டதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.