இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டனாகும் கே.எல்.ராகுல்? நடந்தது என்ன?

sports-cricket kl-rahul
By Nandhini Dec 28, 2021 05:45 AM GMT
Report

ஒருநாள் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீளவில்லையென்றால், இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால், இப்போட்டி நடைபெறும் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், ஓரிரு தினங்களில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன. ஏற்கெனவே, டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார். கே.எல்.ராகுல் நேற்று முன் தினம் தொடங்கிய தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்து அசத்தியிருக்கிறார். அதேபோல், கடந்த சில மாதங்களாவே இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஒருநாள் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீளவில்லை என்றால், இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், துணை கேப்டனாக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் செயல்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த கோலி, உலகக்கோப்பை டி-20 தொடருடன் டி-20 கிரிக்கெட் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்திய ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட்கோலியை பி.சி.சி.ஐ. நீக்கியுள்ளது.

இவருக்கு பதிலாக புதிய இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.