மிஸ்டர் கங்குலி.. உனக்கு வந்தா ரத்தம்... கோலிக்கு வந்தா தக்காளி சட்னியா? - தெறிக்க விட்ட முன்னாள் தேர்வாளர்
விராட் கோலி கேப்டன்சி நீக்கம் குறித்து, சவுரவ் கங்குலி அவரது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலாவது இன்னும் கொஞ்சம் நல்லவிதமாக கையாண்டிருக்கலாம் என்று முன்னாள் தேர்வாளரும் முன்னாள் வீரருமான கீர்த்தி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக தற்போது வெடித்துள்ளது.
விராட் கோலி திடீரென்று ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீடிக்கப்பட்ட விவகாரம் தற்போது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துக்கு கோலியின் கருத்து முற்றிலும் முரண்டாக உள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இது குறித்து, முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விராட் கோலியிடம் முன்கூட்டியே கேப்டன்சி நீக்கம் குறித்து தெரியப்படுத்தியிருக்கலாம் என்பதே முன்னாள் வீரர்கள் பலரது கருத்தாக உள்ளது. அதே கருத்தைத்தான் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வாளருமான கீர்த்தி ஆசாத்தும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீர்த்தி ஆசாத் பேசுகையில் -
க்ரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, கங்குலியை கேப்டன்சியிலிருந்து நீக்கியபோது கங்குலிக்கு ஆதரவாக நான் குரல் கொடுத்திருந்தேன். தனது சொந்த அனுபவத்திலிருந்து கங்குலி, முன்கூட்டியே விராட் கோலியிடம் கேப்டன் பதவி நீக்கம் குறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
இன்னும் சிறப்பான முறையில் பிசிசிஐ இந்த விவகாரத்தை கையாண்டிருக்கலாம். விராட் கோலியிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் இவ்வளவு பிரச்னை வந்திருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.