இப்படியெல்லாம் பேச கங்குலிக்கு உரிமையே கிடையாது - கோலி கேப்டன்சி குறித்து சீறிய வெங்சர்கர்

cricket ganguly sports vengsarkar
By Nandhini Dec 23, 2021 06:54 AM GMT
Report

விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது என்பது தேர்வுக்குழுவினரின் எல்லைக்குட்பட்ட விவகாரமாகும். அப்படியிருக்கும் போது, சவுரவ் கங்குலிக்கு அப்படி பேச உரிமையே இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் திலீப் வெங்சர்கர் கூறி இருக்கிறார்.

தோனிக்கு பிறகு, கேப்டன் பொறுப்பை கச்சிதமாக கவனித்து வந்தவர் விராட் கோலி. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டி-20 உலக கோப்பை தொடருடன் டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா டி-20 கேப்டனாக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான அணி அறிவிக்கப்படும் போது ஒரு நாள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விராட் கோலி விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டி20 கேப்டனான ரோகித் சர்மா புதிய ஒரு நாள் அணி கேப்டனாக்கப்பட்டார்.

விராட் கோலியின், கேப்டன்ஷிப் விவகாரம் தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் கருத்துக்களால் சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கங்குலி, டி-20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலக வேண்டாம் என்று கோலியை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் தன்னிடம் யாரும் அப்படி எதுவும் பேசவே இல்லை என்றும், கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்படுவதே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர் தான் எனக்கு தெரியும் என்றும் கோலி தெரிவித்தார்.

அதே நேரத்தில் கோலியின் கேப்டன்ஷிப் நீக்கம் குறித்து சவுரவ் கங்குலி விளக்கமும் கொடுத்தார். அதில் 2 வடிவ கிரிக்கெட்டுக்கும், தனித்தனி கேப்டன்கள் இருப்பது நன்மையை தரும் என கூறினார். 

கோலி கேப்டன்ஷிப் விவகாரத்தில், சவுரவ் கங்குலியை சாடி முன்னாள் தேர்வுக் குழு தலைவர் வெங்சர்கர் பேசி உள்ளார்.

இது குறித்து வெங்சர்கர் பேசியதாவது -

இந்த ஒட்டுமொத்த சர்ச்சையும் துரதிர்ஷ்டவசமானதாகும். கிரிக்கெட் வாரியம் இந்த பிரச்னையை பக்குவமாக அணுகி இருந்திருக்க வேண்டும். தேர்வுக்குழுவின் சார்பாக கங்குலி பேசவேண்டிய அவசியமே இல்லை. கங்குலி பிசிசிஐ தலைவர்.

அணியின் தேர்வு மற்றும் கேப்டன்சி விவகாரங்களில் ஏதேனும் பிரச்சினை என்றால் அது குறித்து தேர்வுக் குழுவின் தலைவர் தான் பேச வேண்டும். ஒரு கேப்டனை பதவியிலிருந்து நீக்குவது கேப்டனுக்கும், தேர்வுக் குழுவுக்கும் இடையிலான விவகாரமாகும்.

அது கங்குலியின் எல்லைக்குள் வரவே வராது. இந்நிலைமை இனி மாற வேண்டும். கோலியை அனைவரும் மதிக்க வேண்டும். அவர் இந்த நாட்டுக்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்காகவும் அதிகமாக உழைத்துள்ளார்.

பங்காற்றியுள்ளார். பிசிசிஐயின் பக்குவமற்ற செயல்பாட்டினால் நிச்சயம் கோலி பாதிக்கப்பட்டிருப்பார்.

இவ்வாறு வெங்சர்கர் தெரிவித்தார்.  

இப்படியெல்லாம் பேச கங்குலிக்கு உரிமையே கிடையாது - கோலி கேப்டன்சி குறித்து சீறிய வெங்சர்கர் | Sports Cricket Ganguly Vengsarkar