இந்தியா- நியூசிலாந்து அணிகள் 2-வது டெஸ்ட் போட்டி துவங்குவதில் தாமதம்
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து வெற்றி பெற்றது.
இதனையடுத்து, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவானது. இந்நிலையில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது (கடைசி) டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று 9.30 மணிக்கு தொடங்க இருந்தது.
20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்டில் போட்டியில் விளையாடுகிறார். மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது.
இதனால், போட்டிக்கான டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. 9 மணிக்கு சுண்டப்படவேண்டிய டாஸ் தாமதமாகி இருக்கிறது. ஈரப்பதம் குறைந்திருந்தால் மட்டுமே டாஸ் சுண்டப்பட்டு போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், மும்பையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்தியா-நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.