வார்னே, இம்ரான் கானை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின் - 10 ஆண்டுகளாக இந்தியாவின் தொடர் வெற்றி நாயகன் மகுடம் வென்ற அஸ்வின்

sports-cricket-aswin
By Nandhini Dec 06, 2021 12:10 PM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 14 விக்கெட் வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது.

இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி இமாலய சாதனைப் படைத்தது. அத்துடன் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக தன்னுடைய 14-வது டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றிருக்கிறது.

இப்போட்டியின் 2 இன்னிங்ஸிலும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். ஏற்கெனவே, முதல் டெஸ்ட்டில் அஸ்வின் 6 விக்கெட் எடுத்தார். மொத்தமாக அவர் இந்த தொடரில் 14 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதனால், இத்தொடரின் நாயகன் விருதை அஸ்வின் கைப்பற்றி இருக்கிறார்.

இதனையடுத்து, சர்வதேச டெஸ்ட் தொடரில் அதிக முறை தொடர் நாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2ம் இடத்தை பிடித்திருக்கிறார். இவர் ஷேன் வார்னே, ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான் கான் போன்ற பலரை பின்னுக்கு தள்ளி இப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் இருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் தொடர்களில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியல் வருமாறு -

வீரர்கள்                                         டெஸ்ட் போட்டிகள்                டெஸ்ட் தொடர்கள்           தொடர் நாயகன் விருதுகள்

முத்தையா முரளிதரன் (இலங்கை)       133                                    61                                            11

ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)        81                                     33                                            9

ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)        166                                     61                                            9

இம்ரான் கான் (பாகிஸ்தான்)                    88                                     28                                            8

ரிச்சர்ட் ஹாட்லி (நியூசிலாந்து)                86                                     33                                           8

ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா)           145                                    46                                           8

வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)                    104                                    43                                           7

இவ்வாறு முத்தையா முரளிதரனுக்கு பிறகு டெஸ்ட் தொடர்களில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற வீரராக அஸ்வின் முன்னேறி இருக்கிறார். இவர் தென்னாப்பிரிக்க வீரர் காலிஸ் உடன் இணைந்து தற்போது 2வது இடத்தில் இருக்கிறார்.

காலிஸ் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இனிவரும் தொடர்களில் ஒரு முறை தொடர் நாயகன் விருதை வென்றால் அஸ்வின் காலிஸையும் முந்தி தனியாக 2ம் இடத்தைப் பிடிப்பார்.

மேலும், அவர் முத்தையா முரளிதரனையும் தாண்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முன்னதாக சொந்த மண்ணில் 300 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்திருக்கிறார்.

அஸ்வினிற்கு முன்பாக அனில் கும்ப்ளே இந்தியாவில் 300 விக்கெட்டிற்கு மேல் எடுத்திருக்கிறார். இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்துவீச்சாளராக வலம் வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் பல சிறப்பான சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறார்.

கிரிக்கெட் உலகில் ஒற்றை தமிழனாக 10 ஆண்டுகளுக்கு மேலாக அஸ்வின் கொடிக்கட்டி பறந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வார்னே, இம்ரான் கானை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின் - 10 ஆண்டுகளாக இந்தியாவின் தொடர் வெற்றி நாயகன் மகுடம் வென்ற அஸ்வின் | Sports Cricket Aswin