ஐபிஎல் 2022 - கே.எல்.ராகுல் தக்க வைக்கப்படாதது ஏன்? - அனில் கும்ப்ளே விளக்கம்
கே.எல்.ராகுல் ஓராண்டு தடைசெய்யப்படலாம் என்ற நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ஏன் தக்கவைக்கவில்லை என்று அந்த அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விளக்கம் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டிருக்கின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி 2 உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.16 கோடி மட்டுமே செலவிட்டு, கையிருப்பாக அதிகபட்சமாக ரூ.72 கோடி வைத்திருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் (ரூ.4கோடி) மயங்க் அகர்வால் (ரூ.12கோடி) இருவர் மட்டுமே தக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பஞ்சாப் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, தமிழக வீரர் முருகன் அஸ்வின் கூட தக்கவைக்கப்படவில்லை. வெளிநாட்டு வீரர்களில் ஜோர்டான் நிகோலஸ் பூரன், கிறிஸ் கெயில் ஆகியோரும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கேப்டன் ராகுலையே கழற்றி விட்டிருக்கிறார்கள். காரணம், அவர் லக்னோ அணியுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் என்பது பெரிய புகாரையடுத்து, அது பெரும் சர்ச்சையாகி அவரும் ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கானும் சிக்கியிருக்கிறார். இதற்கு அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர், “கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் அணியில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் கே.எல்.ராகுல். அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக நான் பயிற்சியாளராக வந்தபின், அவர் கேப்டனாக இருந்தார்.
அவரை நிச்சயமாக நாங்கள் தக்க வைக்கவே விரும்பினோம். தொடர்ந்து அணியில் வைத்திருக்க விரும்பினோம். ஆனால், ராகுல் தன்னை விடுவிக்கும்படியும், ஏலத்துக்கு செல்ல விரும்புவதாகவும் அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதால் விடுவித்துவிட்டோம்.
ஆனால், ஏலத்தில் நிச்சயம் ராகுலை விலைக்கு வாங்கி அவரை எடுத்து விடுவோம். மீண்டும் பஞ்சாப் அணிக்கு ராகுல் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக வீரர்கள் ஏலத்துக்கு செல்வதா அல்லது அணியில் நீடிப்பதா என தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அந்தவகையில் ராகுல் எடுத்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்" என்றார்.
முன்னதாக, இன்சைடு ஸ்போர்ட் செய்திகளின் படி பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பிசிசிஐ-யிடம் புகார் கொடுத்துள்ளது. அதாவது விதிமுறைகளை மீறி புதிய ஐபிஎல் அணியான லக்னோ அணி ஏலத்துக்கு முன்பாகவே கே.எல்.ராகுல் மற்றும் ரஷீத் கானை பிடித்துப் போட ஆசைக்காட்டி இழுத்ததாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மையானால் ஓராண்டு தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.