‘நான் வங்கதேச விமானப்படை வீரன்...’ - ஹீரோவாக மாறிய இபாதத் ஹுசைன் - வைரலாகும் பேட்டி

sports-cricket
By Nandhini Jan 05, 2022 08:26 AM GMT
Report

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் இபாதத் ஹுசைன், இவரால் இன்று நியூசிலாந்தில் வங்கதேசம் அரிய டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர் 2-வது இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 46 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் கைப்பற்றி நியூசிலாந்தை 2வது இன்னிங்சில் 169 ரன்களுக்கு சுருட்டியுள்ளார்.

இதனால், வங்கதேசம் 17 டெஸ்ட் போட்டிகள் தொடர் உள்நாட்டு வெற்றி கண்ட நியூசிலாந்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இவரது ஸ்பெஷாலிட்டி விக்கெட் எடுத்ததும் சல்யூட் செய்வது, இவரது சல்யூட் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த இபாதத் ஹுசைன் வங்கதேச விமானப்படையில் வீரரா இருந்தவர். வாலிபால் பிளேயராக இருந்தவர் அங்கிருந்து நீண்ட பயணத்தின் மூலம் கிரிக்கெட்டுக்கு வந்தார். இதன் முன்பு, ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 50 க்கும் மேல் என்று பவுலிங்கில் சொதப்பித்தான் வந்தார்.

இந்நிலையில், மோமினுல் ஹக் கேப்டன்சியில் இவர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டார். இவரது ஸ்டம்ப் டு ஸ்டம்ப் மற்றும் 4-வது ஸ்டம்ப் லைன் பவுலிங் அற்புதமாகக் கைகொடுத்தது. அதுவும் 2வது இன்னிங்சில் இன்றைய டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரரான டெவன் கான்வேயை வீழ்த்தியது திருப்பு முனையாக அமைந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் டெவன் கான்வே சதம் எடுத்தார். இன்று வந்து ராஸ் டெய்லருக்கும் அதியற்புதமான பந்தை வீசினார் இபாதத் ஹுசைன், இவர் 11 டெஸ்ட்களில் 18 விக்கெட்டுகள்தான் எடுத்திருக்கிறார். இவருக்கு 27 வயது ஆகிறது. இன்னும் 4 ஆண்டுகள் கரியர் முழு வேகத்துடன் வீச இவரால் முடியும். இந்நிலையில், இன்று ஆட்டம் முடிந்தவுடன் ஆட்ட நாயகன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கொடுத்த பேட்டி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் பேசியதாவது -

“எங்கள் அணி நாங்கள் இங்கு வரும்போது ஒரே கொள்கையுடன் வந்தது, நியூசிலாந்தை அவர்கள் மண்ணில் வீழ்த்த வேண்டும் என்பதே அது.

நியூசிலாந்தில் எங்கள் சகோதரர்களும் அணிகளும் 21 ஆண்டுகளாக வெற்றி பெற முடியவில்லை. இந்த முறை நாங்கள் ஒரு இலக்கை வரிந்தோம்.

அதாவது, நியூசிலாந்தை அவர்கள் மண்ணில் வீழ்த்தியே தீர வேண்டும் என்பதே அந்த லட்சியம். அந்த உறுதி மொழி. நம்மால் முடியும் என்று நம்பினோம்.

கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சனுடன் மிகவும் கடுமையாக உழைத்தேன்.

வங்கதேசத்தில் பிட்சில் வேகப்பந்து வீச்சுக்கு ஒன்றும் இருக்காது. வெளிநாடுகளில் எப்படி வீசுவது ரிவர்ஸ் ஸ்விங் எப்படி போடுவது என்பதை இன்னமும் கூட கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

நான் எப்போதும் ஆஃப் ஸ்டம்புக்கு மேல்தான் குறி வைப்பேன்.

சக்சஸ் என்னைத் தேடி வர நான் பொறுமையாகத்தான் காக்க வேண்டி இருந்தது.

நான் ஒரு ராணுவ வீரன். வங்கதேச விமானப்படை வீரன் நான். எனவே முறையான சல்யூட் எப்படி வைப்பது என்பது எனக்குத் தெரியும்.

வாலிபாலிலிருந்து கிரிக்கெட்டுக்கு வந்தது ஒரு நீண்ட நெடுங்கதை. எனக்கு கிரிக்கெட் பிடித்துள்ளது. வங்கதேசத்தையும், வங்கதேச விமானப்படையையும் பிரதிநிதித்துவம் செய்வது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.