வேகப்பந்துவீச்சாளர் சிராஜுக்கு காயம் - 2-வது நாளில் களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

sports-cricket
By Nandhini Jan 04, 2022 04:00 AM GMT
Report

தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தது. கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், ரவிச்சந்திரன் அஷ்வின் 46 ரன்களும் எடுத்திருந்தனர்.

மற்ற வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இதனால் இந்திய அணி 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து விட்டது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸின் போது இந்திய வீரர் முகமது சிராஜ் பந்துவீசும் போது திடீரென பாதியில் நிறுத்திவிட்டார். அதன் பின்பு, இந்திய அணியின் பிசியோதெர்பிஸ்ட் நிதின் பட்டேல் வந்து களத்தில் சிராஜின் காயத்தை பார்த்துவிட்டு பின்னர் அவரை களத்திலிருந்து அழைத்து சென்றுவிட்டார்.

நேற்றைய நாள் போட்டியின் முடிவில் இந்திய பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ‘சிராஜ் உடைய காயம் சிறிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். காயம் ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் அவரை ஆய்வு செய்த பிறகு அணியின் மருத்துவர் உரிய முடிவை எடுப்பார். அவர் மீண்டும் களத்திற்கு வந்து இந்தியாவிற்காக சிறப்பாக பந்துவீசுவார்என நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்பு, நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்பு, இந்திய கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக விலகினார். கேப்டன் விராட் கோலி இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவாக இப்போட்டி பார்க்கப்படுகிறது. இச்சூழலில் தற்போது சிராஜ் உடைய காயமும் இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது. எனினுன், இன்றைய போட்டிக்கு முன்பாக அவருடைய காயத்தை பார்த்த பிறகு அவர் மீண்டும் விளையாடுவாரா என்பது தெரியவரும்.