தென் ஆப்பிரிக்காவில் இவர் எப்படிதான் ஆடப்போகிறாரோ? கங்குலி கவலைப்படும் இந்திய வீரர்
நியூசிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம், அரைசதம் என்று சாதனை புரிந்த மும்பை வீரர் ஷ்ரேயஸ் அய்யர், தென் ஆப்பிரிக்காவில் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும் என்று பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறி இருக்கிறார்.
இந்தியாவில் தாதாவாக இருக்கலாம் ஆனால் தென் ஆப்பிரிக்காவில் ரபாடா, நார்ட்யே, லுங்கி இங்கிடி, ஆலிவியர் போன்ற பவுலர்கள் சாதாரணமாவர்கள் கிடையாது.
எனவே அங்கு சென்றால் ஷ்ரேயஸ் அய்யர் மட்டுமல்ல நம் கோலியே அடி வாங்காமல் இருப்பது கடினம். பிட்ச் அப்படிப்பட்ட கொடூரமான வேகப்பந்து பிட்ச்.
வங்கதேசம் ஒரு முறை செல்லும் போது நன்றாகச் சென்று வரும்போது ஆம்புலன்ஸ் விமானத்தில் வராத குறைதான். இந்த முறை இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டேயில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஷ்ரேயஸ் அய்யர் பற்றி கங்குலி கூறியதாவது -
முதல் தரக் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களுக்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார். அதுவும் பல ஆண்டுகளாகவே முதல் தர கிரிக்கெட்டில் 50 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார்.
இது சாதாரண வீரரால் செய்ய முடியாது. ஒரு கட்டத்தில் நம் திறமையை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் சென்று காட்ட வேண்டும். அவர் தன் முதல் டெஸ்ட்டில் அருமையாக ஆடியது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் அவருக்கு உண்மையான டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்கள்தான்.
பந்துகள் ஸ்விங் ஆகி எழும்பும் பிட்ச்களில் தான் அவர் நிரூபிக்க வேண்டும். நிச்சயம் அவர் நிமிர்ந்து நின்று ஆடுவார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கங்குலி கூறினார்.
ஷ்ரேயஸ் அய்யரின் முதல் தர கிரிக்கெட் சாதனை திகைப்பூட்டக் கூடியது. 54 மேட்ச்களில் 4,591 ரன்கள் எடுத்துள்ளார், சராசரி 52. 18. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 105 மற்றும் 65 ரன்கள் என்று அசத்தினார் ஷ்ரேயஸ் அய்யர். ஆனால் மும்பையில் 18 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.