விராட் கோலி - ரோகித் சர்மா மீது கோபமடைந்த தோனி - நடந்தது என்ன?
விராட் கோலி, ரோகித் சர்மா இருவருமே தல தோனி கேப்டனாக இருக்கும்போது ஆடியவர்கள். அந்த ஒரு தருணத்தில் 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை விராட் கோலி அஸ்வினுடன் யூடியூப் சேனலில் பேசும்போது போது ருசிகரமாக தெரிவித்தார்.
ரோகித் சர்மா 2007ம் ஆண்டு இந்தியா அணியில் அறிமுகமானார். ஆனால், ரோகித் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க 6 ஆண்டுகளாகியது.
ஆனால் 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆடிய போதே விராட் கோலி தன் இடத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். 2012ம் ஆண்டு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் வைஸ் கேப்டனார் விராட் கோலி. 2012ம் ஆண்டில் தான் விராட் கோலி, வைஸ் கேப்டனாக கேப்டன் தோனியின் அதிருப்தியைச் சம்பாதித்தார்.
இதில் ரோகித் சர்மாவிற்கும் பங்கு உண்டு. 2012ம் ஆண்டு ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன்னை 3 ரன்களாக கோலியும், ரோகித்தும் ஆக்கினர். இது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது. இந்த தருணத்தில்தான் தோனி மிகவும் கடுப்பாகிவிட்டார்.
இது குறித்து கோலி, அஸ்வினிடம் யூடியூப் சேனலில் கூறுகையில், “அது மிகவும் வேடிக்கையான தருணம். தோனி மகிழ்ச்சியாகவே இல்லை. பாகிஸ்தான் 329 ரன்களை குவித்ததாக நினைவு. பெரிய கூட்டணிகளை அமைத்தனர். அப்போது நானும், ரோகித் சர்மாவும் பீல்டிங்கில் சொதப்பிவிட்டோம். அது ஒரு ரன் தான்.
ஆனால் நானும், ரோகித்தும் இடித்துக் கொண்டு 3 ரன்களை கொடுத்தோம். எனக்கு நினைவு உள்ளது. இர்பான் பதான் தான் பந்தை எடுத்து த்ரோ செய்தார். தோனி நினைத்திருப்பார் எப்படி நானும் ரோகித்தும் 3 ரன்களை கொடுத்தோம் என்று.
நீங்கள்தான் பவுலர் (அஸ்வின்), உமர் அக்மல்தான் அப்படி ஆடினார். நான் டீப் மிட்விக்கெட், ரோகித்சர்மா டீப் ஸ்கொயர் லெக், இருவருமே ஒரு பந்துக்கு ஓடி வந்து முட்டிக் கொண்டோம்.” என்றார்.
பிறகு இந்த 2 பேட்டர்கள்தான் அதாவது கோலியும், ரோகித்தும்தான் இந்திய அணியை அதே போட்டியில் வெற்றிக்கு இட்டுச் சென்றார்கள். விராட் கோலி அன்றுதான் தன் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரான 148 பந்தில் 183 ரன்கள் என்ற விளாசல் இன்னிங்ஸை ஆடினார்.
ரோகித் சர்மா அப்போதெல்லாம் பின்னால்தான் இறங்குவார், அவர், 83 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். 3-வது விக்கெட்டுக்காக இருவரும் 172 ரன்களைச் சேர்த்தார்கள்.
ஆனால், அந்த ஆசியக் கோப்பையில் இந்தியா இறுதிக்கு முன்னேறவில்லை. 2016ம் ஆண்டு தோனி தலைமையில்தான் டி20 ஆசியக் கோப்பையை இந்தியா வெற்றி பெற்றது.
2018ம் ஆண்டு ரோகித் சர்மா இந்தியக் கேப்டனாக ஆசிய கோப்பையை வென்ற போது தோனி ஆடியதும் குறிப்பிடத்தக்கது.