‘கேப்டன் பதவி பறிப்பு குறித்து... எனக்கு கடைசி நேரத்தில் தான் சொன்னாங்க...’ - விராட் கோலி வேதனை
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் 26ம் தேதி இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் தொடங்க இருக்கிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு தனி விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக விராட் கோலி நேற்று காணொலி வாயிலாக மும்பையில் நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது -
தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதற்கு 1½ மணி நேரத்திற்கு முன்பாக இந்திய அணியின் தேர்வு கமிட்டியினர் என்னை தொடர்பு கொண்டு ஆலோசித்தார்கள். அப்போது டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் விவரத்தை நானும், தேர்வு கமிட்டி தலைவரும் (சேத்தன் ஷர்மா) ஏற்றுக் கொண்டோம்.
இறுதியாக, இனி ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக நான் தொடர முடியாது என்று 5 பேர் கொண்ட தேர்வு கமிட்டியினர் முடிவு செய்துள்ளதாக என்னிடம் கூறினார்கள்.
அதற்கு நான், ‘அப்படியா... நல்லது’ என்று சொன்னேன். அதாவது டெஸ்ட் அணித் தேர்வுக்கு பிறகு தான் ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டதே தவிர, அதற்கு முன்பு வரை கிரிக்கெட் வாரியம் தரப்பிலிருந்து இது குறித்து எந்த தகவலும் யாரும் என்னிடம் கூறவில்லை.
நாங்கள் ஐ.சி.சி. உலக கோப்பையை வெல்லாததும் என்னை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். எனவே கிரிக்கெட் வாரியத்தின் முடிவு சரியா? தவறா? என்ற விவாதம் தேவையற்றது.
இவ்வாறு கோலி பேசினார்.