கோலி-ரோகித் இடையே என்ன நடக்கிறது - அதை வெளிப்படையாக அசாருதீனே சொல்லலாமே

sports-cricket
By Nandhini Dec 15, 2021 07:52 AM GMT
Report

கோலி-ரோகித் சர்மா இடையே மோதல் இருப்பாக தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகிறது. கோலி தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரிலிருந்து விலகியது தொடர்பாக முன்னாள் கேப்டன் அசாருதீன், இந்த விலகல் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதை அம்பலப்படுத்துகிறது என்று கூறியதை கவாஸ்கர் ஏற்கவில்லை.

இது குறித்து அசாருதீன் நேற்று தனது டுவிட்டர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் விளையாடமுடியாததை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். கோலி ஓய்வுஎடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால், அதற்கான கால நேரம்தான் சரியில்லை. இருவருக்கும் இடையிலான பிளவு குறித்த ஊகங்களை இந்த செயல் உறுதிசெய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை விட்டுக்கொடுக்காதவர்கள்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சுனில் கவாஸ்கர் கூறியதாவது -

கோலிக்கும் ரோகித்துக்கும் இடையே உரசல் இருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. இரண்டு வீரர்களும் இது தொடர்பாக வெளிப்படையாக மனம் திறந்து பேசினாலே தவிர நாம் இதைப்பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஆம் அசாருதீன் ஏதோ சொல்கிறார்.

உண்மையாக அவருக்கு ஏதாவது உள் தகவல் கிடைத்திருந்தால் அதை வெளிப்படையாக பட்டவர்த்தனமாக சொல்லட்டுமே. என்ன நடந்தது என்று நமக்கு தெரிவிக்கலாமே. அதுவரையில் நான் சந்தேகத்தின் சாதக பலனை கோலி, ரோகித் சர்மா இருவர் சார்பாகவுமே வழங்குவேன்.

இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்குப் பிரமாதமாக சேவையாற்றியவர்கள். எனவே நம்மில் எவரும் துல்லியமான தகவல் இல்லாமல் அவர்கள் இருவரை நோக்கி விரலை சுட்டுவது கூடாது என்றே கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.