ரோகித் சர்மா சீரியஸ் காயம் - ஒரு நாள் தொடருக்கும் சந்தேகம்

sports-cricket
By Nandhini Dec 14, 2021 06:23 AM GMT
Report

கையில் அடிப்பட்ட இந்தக் காயத்தோடு ரோகித் சர்மாவுக்கு முழங்கால் பின் தசைநார் பிரச்சனைகளும் உள்ளன. இது சரியாவதற்கு குறைந்தது 1 மாதம் ஆகும்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய டெஸ்ட் துணைக் கேப்டன் ரோகித் சர்மா விலகி இருக்கிறார். இவருக்குப் பதிலாக பிரியங்க் பஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டிக்கிறார்.

ரோகித் சர்மா காயமடைந்ததையடுத்து, ஸ்டாண்ட்-இன் துணைக்கேப்டனை பிசிசிஐ அறிவிக்கவில்லை. இதற்கு காரணம் ரகானே அணியில் இருப்பதே கடினம் என்ற நிலையை அடுத்து அவரை வைஸ் கேப்டனாக அறிவிக்க முடியாது. ஆனால் இப்போது ரோகித் சர்மா இல்லை என்பதால் ரகானேவுக்கு ஆடும் 11 வீரர்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

இதனையடுத்து வைஸ் கேப்டன் பொறுப்புக்கு ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், அஸ்வின் பெயர்கள் பரிசீலிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடருக்காக மும்பையில் இந்திய அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது, ராகவேந்திரா என்கிற ரகு த்ரோ டவுன் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.

இதில் ரோகித் சர்மா காயமடைந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் ஜனவரி 15ம் தேதி முடிவடைந்து ஒருநாள் தொடர் தொடங்குகிறது. ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மா ஃபிட் ஆகி வருவாரா என்பது ஐயமாகி உள்ளது. ஆனால் டெஸ்ட் தொடருக்கு மட்டும்தான் இல்லை என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா ஆடுவது இப்போது வரை சந்தேகமில்லை என்றாலும் காயத்தின் தன்மை சீரியஸ் என்பதால் ஒருநாள் தொடருக்கும் சந்தேகம் என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கையில் அடிப்பட்ட இந்தக் காயத்தோடு ரோகித் சர்மாவுக்கு முழங்கால் பின் தசைநார் பிரச்சனைகளும் இருக்கின்றன. இது சரியாவதற்கு குறைந்தது 1 மாதமாகும். இந்நிலையில் பிரியங்க் பஞ்சல் மாற்று தொடக்க வீரராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் 96 ரன்களை சில நாட்களுக்கு முன்பாக அடித்தார்.

பஞ்சல் 100 முதல் தரப் போட்டிகளில் ஆடி இருக்கிறார். 7011 ரன்களை 24 சதங்களுடன் எடுத்துள்ளார் பஞ்சல். பார்த்திவ் படேல் தலைமையில் குஜராத் அணி ரஞ்சி டிராபியை வென்ற அணியில் பிரியங்க் பஞ்சல்தான் சிறந்த வீரராகத் திகழ்ந்தார். ரிசர்வ் ஓபனராக ஏற்கெனவே அபிமன்யு ஈஸ்வரன் என்பவர் உள்ளார். இவர் தென் ஆப்பிரிக்கா ஏ தொடரில் 3ம் நிலையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா சீரியஸ் காயம் - ஒரு நாள் தொடருக்கும் சந்தேகம் | Sports Cricket