‘பேசுபவர்கள் பேசட்டும்... நீங்கள்...’ - வீரர்களுக்கு ரோஹித் ஷர்மா அறிவுரை

sports-cricket
By Nandhini Dec 13, 2021 09:30 AM GMT
Report

இந்திய அணியின் ஒரு நாள் போட்டிகளின் புதிய கேப்டன் ரோஹித் ஷர்மா அணி வீரர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.

இந்திய டி-20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனையடுத்து, தென்னாப்பிரிக்க தொடர் முதல் இந்திய அணியின் ஒரு நாள் போட்டி கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் புதிய ஒருநாள் போட்டி கேப்டன் ரோகித்சர்மா இன்று பி.சி.சி.ஐ.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

“நீங்கள் இந்தியாவிற்காக எப்போது விளையாடினாலும் அழுத்தம் இருந்துகொண்டேதான் இருக்கும். மக்கள் பலரும் ஆதரவாகவும் பேசுவார்கள். சிலர் எதிர்மறையாகவும் பேசுவார்கள். ஆனால், எனது தனிப்பட்ட முறையில் நான் எனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவேன். அதற்கு முக்கியத்துவமும் கொடுப்பேன். இதை நான் கேப்டனாக கூறவில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக சொல்கிறேன்.

மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தமாட்டேன். ஏனென்றால், மக்கள் பேசுவதை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாது. இதை நான் லட்சம் முறை பார்ப்பேன். இதுதான் அணிக்கு நான் சொல்ல விரும்பும் கருத்தாகும். ஒரு உயர்தர தொடர் ஆடும்போது பல்வேறு பேச்சுக்கள் எழும். நாம் நம் கையில் என்ன இருக்கிறது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

அதை வெற்றி பெற வேண்டும். அதை வைத்து எப்படி விளையாடுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வெளியில் பேசுவது எல்லாம் அர்த்தமற்றது என்று நினைக்கிறேன். நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் என்ன நினைக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

வீரர்கள் மத்தியில் ஒரு வலுவான உறவை உருவாக்குவது மிகவும் முக்கியம். நாம் நம் இலக்கை அடைய எப்படி உதவுகிறோம் என்பதுதான் முக்கியம். பயிற்சியாளர் ராகுல் கண்டிப்பாக எங்களுக்காக இதை செய்து வருகிறார். நாங்கள் அதை நோக்கி முன்னேறி செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.