கெய்ல் ஒரே இன்னிங்ஸில் 18 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்த நாள் இன்று
தன்னைத்தானே ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று பெருமையோடு அழைத்துக் கொள்ளும் மே.இ.தீவுகளின் அசாத்திய அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 2017-ம் ஆண்டு இதே டிசம்பர் 12ம் தேதி தான் டி-20யில் 18 சிக்சர்களை ஒரே இன்னிங்ஸில் விளாசி உலக சாதனை படைத்தார்.
2017ம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி-20 போட்டித்தொடரில், ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய கிறிஸ் கெய்ல் டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில்தான் 17 சிக்சர்களை விளாசி போட்டி தளத்தையே அதிர வைத்தார். 18 சிக்சர்களுடன் 146 ரன்கள் விளாசினார் கிறிஸ் கெய்ல்.
இதன் பிறகு, ரங்பூர் ரைடர்ஸ் அணி டாக்கா டைனமைட்ஸ் அணியை இறுதியில் வீழ்த்தி பங்களாதேஷ் பிரீமியர் லீக் கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னர் 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக புனே வாரியஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 175 ரன்கள் புரட்டி எடுத்தார். அப்போது, 17 சிக்சர்களை விளாசினார்.
தனது சிக்சர் சாதனையை முறியடித்த கிறிஸ் கெய்ல் டி-20 லீக் இறுதிப் போட்டியில் சதம் அடித்து பாக்கி இருந்த சாதனையையும் முறியடித்தார். இதே பங்களாதேஷ் பிரீமியர் லீகில் ஆரம்பகட்ட மேட்ச் ஒன்றில் 51 பந்துகளில் 126 நாட் அவுட் என்று வெளுத்து வாங்கினார் கிறிஸ் கெய்ல். இது தவிர, பங்களாதேஷ் பிரீமியர் லீகில் 5 சதங்கள் அடித்து சாதனை புரிந்து வரும் யுனிவர்ஸ் பாஸ் கெய்ல்தான்.
இதோடு டி-20 கிரிக்கெட்டில் முதன் முதலில் 20 சதங்களை எடுத்த முதல் வீரரும் கெய்ல்தான், 11,000 ரன்கள் மைல்கல்லைக் கடந்தவரும் இவர்தான். பங்களாதேஷ் பிரீமியர் லீகில் முதன் முதலில் 100 சிக்சர்களை விளாசியவரும் கிறிஸ் கெய்ல்தான் இந்த 18 சிக்சர்கள் அடித்த இறுதிப் போட்டியில் கிறிஸ் கெய்லும் இன்னொரு அதிரடி மன்னனுமான பிரெண்டன் மெக்கல்லம் இணைந்து 201 ரன்களைச் சேர்த்தார்கள்.
இதுதான் டி20 கிரிக்கெட்டின் மிகப்பெரிய கூட்டணி. ஆனால், இந்த இன்னிங்சில் கெய்லுக்கு அதிர்ஷ்டமிருந்தது. 22 ரன்களில் ஷாகிப் அல் ஹசன் கெய்லுக்கு கேட்சை விட்டார்.
மெக்கல்லமுக்கும் கேட்சை விட்டு மிகப்பெரிய அதிரடி வலையிலும் வலியிலும் சிக்கி டாக்கா டைனமைட்ஸ் தனக்கு தானே டைனமைட் வைத்துக் கொண்டு சிதறிப்போனது.