மகளிர் டி20 பிக்பாஷ் கிரிக்கெட் போட்டி - சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் தேர்வு
ஆஸ்திரேலியாவால் பிரபலமான மகளிர் பிக்பாஷ் லீக் போட்டியில், இந்த ஆண்டுக்கான சிறந்த வீராங்கனையாக தேர்வாகி இருக்கிறார் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர்.
மகளிர் பிக்பாஷ் லீக் ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடராகும். 8 அணிகள் மோதும் இந்த ஆண்டுக்கான மகளிர் பிக்பாஷ் லீக் கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது.
இத்தொடரில் 8 இந்திய வீராங்கனைகள் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் அணிக்காக விளையாடி வரும் இந்திய வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர், 2021 மகளிர் பிக்பாஷ் லீக் போட்டியின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகி இருக்கிறார்கள். மகளிர் பிக்பாஷ் லீக்கில் சிறந்த வீராங்கனையாகத் தேர்வாகும் முதல் இந்தியர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கெளர் நடப்பு சீசனில் 399 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாகவும் அவர் இருக்கிறார்.
3 அரை சதங்கள் எடுத்த ஹர்மன்ப்ரீத் கெளர், 3 முறை சிறந்த வீராங்கனைக்கான விருதுகளைப் பெற்றிருக்கிறார். மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி தற்போது நாக் அவுட் சுற்றில் விளையாடி வருகின்றது. நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெறும் இறுதிச்சுற்றுக்கு மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி தகுதி பெறும்.