நெத்தியை தாக்கிய பந்து - ரத்த வெள்ளத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர் - பரபரப்பு சம்பவம்

sports-cricket
By Nandhini Nov 21, 2021 10:23 AM GMT
Report

கடந்த 2014ம் ஆண்டு சிட்னியில் ஷெப்பீல்டு ஷீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார்.

அப்போது, நியூ சவுத்வேல்ஸ் பந்து வீச, பில் ஹியூஸ் அடித்து ஆட முற்பட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருடைய இடது கழுத்துப் பகுதியை பந்து பலமாக தாக்கியது. இதில், நிலைகுலைந்து போன பில் ஹியூஸ் மைதானத்தில் கீழே விழுந்து சரிந்தார்.

இதனையடுத்து, கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். ஹியூஸின் மரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் மனதையும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் உலுக்கி எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் கதறி அழுதனர்.

ஆனால் இன்று அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஜோடியான கேப்டன் கருணரத்னேவும், பதும் நிசங்காவும் பொறுமையாக விளையாடி வந்தனர். அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுக வீரராக ஜெர்மி சோலோஜனோ என்பவர் களமிறங்கினர்.

முதல் போட்டியிலேயே இவருக்கு தான் அந்தப் பயங்கரம் நடந்திருக்கிறது. 24வது ஓவரில் இவர் பேட்ஸ்மேனுக்கு அருகே ஹெல்மெட் அணிந்து பீல்டராக நிறுத்தப்பட்டிருந்தார். அப்போது சேஸ் வீசிய பந்தை கருணாரத்னே வேகமாக அடிக்க, சோலோஜனோ தலையைத் தாக்கியது. பந்து நெற்றிப்பொட்டில் அடித்ததால் மைதானத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார்.

இதனால் மைதானத்தில் அனைவரின் மத்தியிலும் பதற்றம் நிலவியது. இருப்பினும் உடனடியாக மைதான ஊழியர்கள் ஸ்ட்ரச்சரில் தூக்கிச் சென்று அவரை மருத்துவமனைக்கு சேர்த்தனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.