ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது எனக்கு மிகவும் வலித்தது - டேவிட் வார்னர்

Nandhini
in கிரிக்கெட்Report this article
2016ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பட்டத்தை வென்றது. அப்போது, அணி கேப்டனாக இருந்தவர் டேவிட் வார்னர்.
இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே இவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டனாக இருந்த டேவிட் வார்னரின் பதவியை பறித்த அணி நிர்வாகம், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்தது. அது மட்டுமல்லாமல் ஆடும் லெவனிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது முதல் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது. அப்போது, டேவிட் வார்னர் பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன் மூலம் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அவர் அடித்தளம் அமைத்தார். முடிவில், 20 ஓவர் உலகக் கோப்பையில் வார்னர் 7 இன்னிங்ஸ்களில் 289 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் உலகக் கோப்பையில் போட்டியின் தொடர் நாயகன் விருதை வென்றார் டேவிட் வார்னர்.
இது குறித்து ஒரு பேட்டியில் டேவிட் வார்னர் கூறியதாவது;-
பல வருடமாக நான் மிகவும் விரும்பிய அணியிலிருந்து எந்த தவறும் செய்யாமல் என்னை நீக்கினார்கள். காரணம் கூறாமல் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. அதை நான் புகாராக சொல்லவில்லை.
இந்தியாவில் உள்ள ரசிகர்களை மகிழ்விக்க நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஐபிஎல் அணியில் இடம் கிடைக்காமல் போனதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், நான் எப்போதும் மிகக் கடினமான பயிற்சியை மேற்கொள்ள தவறியது கிடையாது. நான் வலைப் பயிற்சியில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தேன். ஒரு பக்கம் வாய்ப்பு மறுக்கப்பட்டால், இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.