கோலி அணிக்கு திரும்பும் நேரம்... இந்திய அணி கூடுதல் பலம் சேரும் : ரோகித், டிராவிட் பேட்டி

sports-cricket
By Nandhini Nov 17, 2021 04:44 AM GMT
Report

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது.

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனையடுத்து, 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், புதிய தலைமையின் கீழ் இந்திய அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் வழக்கத்தை விட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது டிராவிட் பேசுகையில், “இது கடினமான காலம். அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் சரியான ஓய்வு இருப்பது முக்கியம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வீரர்களை மதிக்க வேண்டும். வீரர்கள், அவர்களுக்கு தேவையான ஓய்வை எடுத்து கொள்கிறார்களா என்பதை நான் உறுதி செய்ய வேண்டும். டெஸ்ட். ஒரு நாள், டி20 என ஒவ்வொரு ஃபார்மெட்டுக்கும் ஒவ்வொரு அணியை தயார் செய்வது எனது திட்டம் கிடையாது.

அனைத்து பார்மெட் கிரிக்கெட்டும் முக்கியமானதுதான். அடுத்து ஐசிசி தொடர் வர இருக்கிறது. இந்நிலையில், அதற்காக தயார் செய்து கொள்வது அவசியம். அணியை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக முன்னேற்றம் தேவை.

கிரிக்கெட் விளையாட்டில் பணிச்சுமை மேலான்மை மிக முக்கியமானது. நமது வீரர்கள் பிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டுமே, அதை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், “இந்திய அணி வீரர்கள் பயமின்றி ஆடலாம். ஒரு அணியில் ஆல்-ரவுண்டரின் பங்கு மிக முக்கியமானது. தேவைக்கு ஏற்ப, ஒவ்வொரு வீரரும் அவர்களது பொறுப்புகளை மாற்றி கொள்ளலாம். விராட் கோலி மிக முக்கியமான வீரர். அவர் அணிக்கு திரும்பும் நேரம், இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேரும்” என்றார்.