ரோகித் - ராகுல் 'காம்போ' - நியூசிலாந்துக்கு எதிராக நாளை முதல் டி20 கிரிக்கெட் போட்டி - மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தொடங்க உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக நியூசிலாந்து அணி நேற்று ஜெய்பூர் வந்துள்ளது.
முதல் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நாளை தொடங்க இருக்கிறது. ஜெய்ப்பூரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் சர்வதேச போட்டி இதுதான்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ‘டாஸ்’ வென்ற அணிகளே, போட்டியில் வென்றது போல, வரும் டி20 தொடரிலும் ‘டாஸ்’ முக்கியப் பங்கு வகிக்கும். தற்போது குளிர்காலம் என்பதால் முதல் போட்டி நடக்கும் ஜெய்ப்பூரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இருப்பினும், இதைத் தவிர்க்க ‘ஸ்பிரே’ பயன்படுத்த இருப்பதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஜெய்ப்பூர் மைதானத்தில் 25,000 பேர் அமர்ந்து இந்தப் போட்டியை கண்டு ரசிக்கலாம். இந்த போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு 100 சதவீதம் அனுமதி தரப்பட்டிருக்கிறது.
‘டி–20’ தொடரை விட இந்தியா உடனான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.
டி20உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்திய அணி, அந்த தொடரில் இரண்டாமிடம் பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருப்பதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதற்கான இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, பயிற்சியாளராக டிராவிட் செயல்பட இருக்கிறார்கள். ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுவே ஆகும்.