எனக்கு முன்பே தெரியும்.... - வார்னர்தான் தொடர் நாயகனாக இருப்பார் என்று பயிற்சியாளரிடம் கூறினேன் - ஆரோன் பின்ச்
வார்னர் தொடர் நாயகனாக இருப்பார் என்று முன்பே பயிற்சியாளரிடம் தெரிவித்ததாக கூறியிருக்கிறார் ஆரோன் பின்ச்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவுற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தி இருக்கிறது.
இத்தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் டேவிட் வார்னர் 289 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.
இதற்காக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. டி-20 உலகக் கோப்பை வென்ற அணியிலிருந்து தொடர் நாயகன் விருதினை பெறுவது இது 2வது முறையாகும். இதற்கு முன்னர் 2010ம் ஆண்டு இங்கிலாந்து டி20 உலகக் கோப்பை வென்றபோது கெவின் பீட்டர்சன் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
மோசமான ஃபார்ம் காரணமாக 2021 ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் டேவிட் வார்னரிடமிருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த பின் சில போட்டிகளில் வார்னர் எதிர்பார்த்த பேட்டிங் செய்யவில்லை என்பதால், அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
இதனால் டேவிட் வார்னர் பேட்டிங் ஃபார்ம் மீது விமர்சனங்கள் கடுமையாக எழத் தொடங்கின. அவை அனைத்துக்கும் நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் தனது பேட்டிங் மூலம் வார்னர் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ஆரோன் பின்சி பேசுகையில், வார்னரை எப்படி ஆதரித்தீர்கள் என்று கேட்டபோது, ''தொடர் நாயகனாக டேவிட் வார்னர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு நான் ஜஸ்டின் லாங்கரை (பயிற்சியாளர்) அழைத்து, 'வார்னரை பற்றி கவலைப்படாதீர்கள், அவர் தொடர் நாயகனாக இருப்பார்' என்று சொன்னேன். டேவிட் வார்னர் அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்றெல்லாம் விமர்சகர்கள் எப்படி எழுதினார்கள் என்று தெரியவில்லை. அவர் எல்லா நேரத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மேலும் அவர் ஒரு போராளி'' என்றார்.