சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு? கிறிஸ் கெய்ல் கொடுத்த உருக்கமான விளக்கம்
நான் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை என்றும், ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஆசைப்படுவதாகவும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் நடப்பு உலக கோப்பை தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி வெறும் 45 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். கெய்லின் மோசமான ஆட்டமும், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்து வெளியேறிய போது ரசிகர்களை நோக்கி உற்சாகமாக பேட்டை உயர்த்தி காட்டியபடி சென்றார். எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்த சக வீரர்கள் கைதட்டி ஊக்கப்படுத்தி கட்டித்தழுவி வரவேற்றார்கள்.
இவற்றை பார்க்கும் போது கெய்ல் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், போட்டிக்குப் பிறகு கிறிஸ் கெய்ல் கூறுகையில், தான் ஓய்வை அறிவிக்கவில்லை.
இன்றும் ஒரு டி-20 தொடரில் விளையாட ஆசைப்படுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கும், அணிக்கும் உலகக் கோப்பை தொடர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நான் இன்னும் ஒரு டி20 உலகக் கோப்பையை விளையாட ஆசைப்படுகிறேன்.
ஆனால் என்னை அனுமதிக்கமாட்டார்கள்'' என்றார். டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்ட கெய்ல், 2019-ம் ஆண்டுடன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி விட்டார். 20 ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ ஏற்கெனவே நேற்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெறுவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.