88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த அனுஷ்கா ஷர்மா - பிசிசிஐ ட்விட்டால் குழம்பிப்போன ரசிகர்கள்
மகளிர் கிரிக்கெட் போட்டியில் அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்ததாக, பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருப்பதைக் கண்டு நெட்டிசன்கள் குழப்பமடைந்தார்கள்.
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடரை பிசிசிஐ நடத்தி வருகின்றது. இது உள்நாட்டு மகளிர் வீராங்கனைகளை கொண்டு நடத்தப்படும் தொடர். இந்தத் தொடரில் இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி மற்றும் இந்தியா டி என 4 அணிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் இந்தியா பி அணியின் கேப்டனாக இருப்பவர் அனுஷ்கா பிரிஜ்மோகன் ஷர்மா. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும், இந்தியா பி அணியும் மோதிக் கொண்டன.
இந்த ஆட்டத்தின் ஸ்கோர் அப்டேட்கள், 'BCCI Women' என்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் பதிவிடப்பட்டு வந்தது. அப்போது, 'இந்தியா பி அணியின் வீராங்கனை அனுஷ்கா ஷர்மா 88 பந்துகளில் 52 ரன்கள் எடுத்துள்ளதாகும், அணியின் ஸ்கோர் 140/0 என்றும் டுவிட் செய்யப்பட்டிருந்தது.
இந்த ட்விட்டைக் கண்டவர்கள் சற்று குழப்பமடைந்தார்கள். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மனைவி பெயரும் அனுஷ்கா ஷர்மா என்பதால், அவர் தான் இவரா? அனுஷ்கா ஷர்மா எப்போது கிரிக்கெட் அணியில் இணைந்தார்? அனுஷ்கா ஷர்மாவா...? என கேள்விக் குறியிட்டும் நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வந்தார்கள்.
அந்த ஒரு ட்விட்டுக்கு மட்டும் லைக்ஸ் எண்ணிக்கை மளமளவென குவிய ஆரம்பித்தன. அந்த ட்விட்டை ஸ்கீரின்ஷாட் எடுத்து மீம்ஸ்களாக மாற்றி பகிர்ந்து வருகிறார்கள்.
டுவிட்டர் பக்கத்தில் அனுஷ்கா பிரிஜ்மோகன் ஷர்மா என்ற பெயரை அனுஷ்கா ஷர்மா என சுருக்கி பதிவிட்டால்தான் குழப்பம் உருவாகி உள்ளதாக விபரமறிந்த நெட்டிசன்கள் கமெண்டில் விளக்கம் கொடுத்துள்ளனர்.
Anushka Sharma 52 runs in 88 balls (5x4, 1x6) India B 140/0 #U19ChallengerTrophy
— BCCI Women (@BCCIWomen) November 2, 2021