முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் கைது - நடந்தது என்ன? ரசிகர்கள் அதிர்ச்சி
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லேட்டர் (51) நியூ சவுத் வேல்ஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
குடும்ப வன்முறை காரணமாக அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12ம் தேதி குடும்ப வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று காலை 9 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், அவர் மான்லி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முழு விவரம் எதுவும் வெளியாகவில்லை.
இவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றிகளைத் தேடி கொடுத்தவர். 1993 முதல் 2001ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் முக்கியவத்துவம் வாய்ந்த ஜாம்பவான் வீரராக வலம் வந்தார். இதுவரை 74 டெஸ்ட் போட்டிகள், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 5 ஆயிரத்து 312 ரன்களைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெற்றாலும் கடந்த 15 வருடங்களாக கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்,ஸ்கை உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி வருகிறார்.


