'மெண்டார்' பணியை தொடங்கினார் ‘தல’ தோனி

sports-cricket
By Nandhini Oct 18, 2021 07:03 AM GMT
Report

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் தோனி துபாயில் தன்னுடையை பணியை தொடங்கி உள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இப்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகிறது.

இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது 1-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24ம் தேதி சந்திக்கின்றது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2007ம் ஆண்டு தலைமை தாங்கிய தோனி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார். எனவே அவரது அனுபவம் இந்திய அணிக்கு பேருதவியாக இருக்கும் என்பதால் பிசிசிஐ இத்தகைய முடிவு எடுத்திருக்கிறது.

இப்போது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையையும் வென்றதால் தோனி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. டி20 உலகக் கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டம் இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடக்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியினருடன் நேற்று இணைந்த தோனி வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்கியிருந்தார். அந்தப் புகைப்படங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் "இந்திய அணியின் புதிய பொறுப்புக்கு வரவேற்கிறோம்" என தெரிவித்துள்ளது.