இந்திய வீரர்களுக்காக இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்த பிசிசிஐ! என்ன தெரியுமா?
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பயிற்சி ஆட்டத்திற்காக பிசிசிஐ தரப்பு கோரிக்கை வைத்திருக்கிறது . இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் செவிசாய்த்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி கடந்த ஜூன் 18-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சௌதாம்டன் மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தில் மழை பெய்ததால், போட்டிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இருப்பினும், இறுதியில் இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதற்காக தற்போது வரை இந்திய வீரர்கள் மட்டுமல்லாது பலகோடி ரசிகர்களும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர்.
உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிவுற்ற பிறகு தற்போது இந்திய வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து வருகிற ஜூலை 14ஆம் தேதி இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரும் துவங்க இருக்கிறது இந்த தொடரில் மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் இடம்பெறுகின்றன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக வீரர்களின் மனநிலை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள குறைந்தபட்சம் ஒரு பயிற்சி ஆட்டமாவது இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தது.
இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் செவிசாய்த்திருக்கிறது. பிசிசிஐ சார்பில் அதன் தலைமை செயலாளர் ஜெ சா, இங்கிலாந்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதன் பிறகு வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் விரைவில் அதற்கான நேரத்தை குறித்துவிட்டு போட்டிக்கான இடத்தையும் விரைவில் தெரிவிப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திம் வெளியிட்ட அறிக்கையில், பிசிசிஐ மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திற்காக கோரிக்கை வைத்திருந்ததை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டோம் என்றும் இந்திய அணியை தயார் செய்வதற்காக மூன்று நாள் பயிற்சி ஆட்டம் விரைவில் கவுண்டி அணியுடன் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் உறுதிப்படுத்திய பிறகு போட்டிக்கான தேதி மற்றும் இடம் ஆகியவை வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.