அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - பட்டத்தைத் தட்டிச் சென்றார் எம்மா ரடுகானு! 18 வயதில் சாதனை!

sports
By Nandhini Sep 12, 2021 10:36 AM GMT
Report

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு கோப்பையை வசப்படுத்தினார்.

உலக தரவரிசையில் 150வது இடத்தில் இருக்கும் 18 வயது ஆன ரடுகானு, கனடாவை சேர்ந்த உலக தரவரிசையில் 73வது இடத்தில் இருக்கும் 19 வயது வீராங்கனை லேலா பெர்னான்டசை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆட்டம் மிக விறுவிறுப்பாக சென்றது. இந்த ஆட்டத்தில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரிட்டன் வீராங்கனை ரடுகானு வெற்றிக்கொண்டார்.

இதன் மூலம் 44 ஆண்டுகளுக்கு பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அவருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1977ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த விர்ஜினியா வேட் என்ற வீராங்கனை விம்பிள்டனில் மகளிர் ஒற்றையரில் வாகை சூடினார்.

அவருக்கு பிறகு தற்போது எம்மா ரடுகானு வாகை சூடியுள்ளார். அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற ரடுகானுவை பிரிட்டன் ராணி 2 எலிசபெத் பாராட்டி இருக்கிறார். இவ்வளவு சிறிய வயதில் சாதனையை படைத்துள்ளீர்கள், இது உங்களின் கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த வெற்றி என ராணி எலிசபெத் பாராட்டி உள்ளார்.

தரவரிசையில் மிகவும் பின் தங்கிய வீராங்கனைகள் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதிய போட்டி இதுதான். மேலும் தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடிய ஒரு வீராங்கனை அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை.