ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்று சாதனை படைத்த ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகும் பஞ்சாப் அரசு!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில், இந்திய ஹாக்கி அணி ஜெர்மனி அணியை எதிர்த்து களமிறங்கியது.
போட்டி தொடங்கிய இரண்டே நிமிடத்திலேயே ஜெர்மனி அணி முதல் கோல் அடித்து அரங்கத்தையே அதிர வைத்தது. எனினும், விடா முயற்சியோடு விளையாடிய இந்திய அணி 5 -4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்திய ஆடவர் ஹாக்கி அணி சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை தன்வசப்படுத்தி, இந்தியர்களுக்கு மகிழ்ச்சியையும், பேரின்பத்தையும் அளித்தது.
இதனையடுத்து, இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வெற்றியை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்களை அள்ளித் தெறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியில் உள்ள பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்திருக்கிறது.
கேப்டன் மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபிந்தர் பால் சிங், ஹர்திக் சிங், ஷம்ஷெர் சிங் உள்ளிட்ட 8 வீரர்களுக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.