டோக்கியோ ஒலிம்பிக் - சும்மா பட்டுன்னு பஞ்ச் விட்டு சாய்த்த இந்தியாவின் இளம் பாக்ஸர் - காலிறுதிக்கு முன்னேறினார்!
டோக்கியோவில் ஜூலை 23ம் தேதியிலிருந்து ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கு முதல் நாளில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பின்னடைவு ஏற்பட்டாலும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்தார் மீராபாய் சானு.
அதற்குப் பிறகு எந்தவொரு போட்டியிலும் இந்தியா பதக்கம் வெல்லவில்லை. இந்தியா தற்போது பதக்க பட்டியலில் ஒரெயொரு வெள்ளியுடன் 34வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், குத்துச்சண்டை போட்டியில் வீராங்கனை ஒருவர் பதக்கத்தை பெறும் பிரகாச ஒளியை பெற்றுள்ளார். அனுபவமிக்க வீராங்கனையை தனது முதல் அறிமுகப் போட்டியிலேயே வீழ்த்தி சாய்த்துள்ளார். அவர் பெயர் லோவ்லினா போர்கோஹெயின்.
சர்வதேச அளவில் பல தொடர்களில் விளையாடி பதக்கங்கள் வாங்கியிருந்தாலும், அவருக்கு இது தான் முதல் ஒலிம்பிக் போட்டி. முதல் சுற்றில் வென்ற இவர் இரண்டாவது சுற்றில் பலம் வாய்ந்த ஜெர்மனி வீராங்கனை நாடினுடன் மோதினார்.
வயதிலும், அனுபவத்திலும் மூத்தவரான நாடினை வீழ்த்தி லோவ்லினா வெற்றி பெற்றுள்ளார். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய லோவ்லினா 3-2 என்ற புள்ளிக்கணக்கில் நாடினை சாய்த்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.