இந்தியாவிற்கு கிடைத்தது அடுத்த தங்க பதக்கம்… மல்யுத்த போட்டியில் தூள் கிளப்பிய பிரியா மாலிக் வெற்றி!

sports
By Nandhini Jul 25, 2021 09:15 AM GMT
Report

ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பிரபல போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் உலக கேடட் (ஜூனியர் லெவல்) மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது.

இந்தத் தொடரில் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனையுடன் மோதினார்.

ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் சாதுர்யமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். இப்போட்டியில் முதல் இடத்தைப் பிடித்து இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்திருக்கிறார்.

முன்னதாக 43 கிலோ எடைப்பிரிவில் தன்னு தங்கம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக்ஸில் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்ததை தொடர்ந்து, தற்போது பிரியா மாலிக்கும், தன்னும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

ஹரியானாவைச் சேர்ந்த பிரியா மாலிக்கிற்கு அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 73 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஹரியானா மகள் பிரியா மாலிக்கிற்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள அனைவரும் பிரியா மாலிக்கின் சாதனையை சமூகவலைத்தளத்தில் பாராட்டி வருகிறார்கள்.