இங்குதான் அனுமன் பிறந்தார் - திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அனுமன் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனுமன் பிறந்த இடம் எது என்பது குறித்து இன்று வரை பல்வேறு சந்தேகங்கள் பலருக்கு எழுந்து கொண்டுதான் உள்ளது. புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் அனுமன் பிறந்த இடம் குறித்து பல இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும், ‘வெங்கடாசல மகாத்மியம்’ உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொள்ள, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளிதர சர்மா தலைமையில் குழு ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் நியமித்திருந்தது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ராமநவமி நாளையொட்டி நேற்று விழா சிறப்புடன் நடைபெற்றது. இதனையடுத்து, திருப்பதியில் அஞ்சனாத்ரி மலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை சொல்லும் விதமாக, புத்தகம் ஒன்று அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
நாதநீராஞ்சன மண்டபத்தில் நடந்த இந்த விழாவில், திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி புத்தகத்தை வெளியிட அதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெற்று கொண்டார்.
இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி கூறுகையில், அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பது ராமநவமி நாளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அறிஞர்கள் குழு புராண, வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் சான்றுகளின் அடிப்படையில் இந்த உண்மை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிட்டிருக்கிறோம். விரைவில் புத்தக வடிவில் வெளியாகும் என்று கூறினார்.