சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு!
காட்பாடி அருகே 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோவிலில், பங்குனி உத்திரத்தில் சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 22ம் நாள் முதல் 10 நாட்களுக்கு இந்த திருகோவிலில் உள்ள சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும்.
அதே போல் இந்தாண்டும் பங்குனி உத்திராயனத்தில், பங்குனி மாதம் 22 முதல் சித்திரை 1 வரை ஏழு நாட்கள் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படும். சிவன் மீது சூரிய ஒளி படும் இந்த அதிசய நிகழ்வு காலை ஆறு மணி முதல் 6.30 வரை நடைபெறும். இந்த அதிசய நிகழ்வினால் இத்திருத்தலம் சூரியன் வழிப்பட்ட திருத்தலமாக இந்த கோவில் கருதப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுவதாலும் இன்று கடைசி நாள் நிகழ்வு மற்றும் தமிழ் புத்தாண்டு என்பதாலும் இந்த நிகழ்வை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகதீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
சிவபெருமானை சூரியன் தரிசிப்பதால் இதை காணும் பக்தர்களுக்கு ஏழுபிறவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகமாக கருதப்படுகின்றது. மேலும், அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி பூஜையும் வெகு விமர்சையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது