வசூலில் சாதனைப் படைத்த ஸ்பைடர் மேன் - கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்
ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் திரைப்படம் 2018 இல் வெளியான அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் முதல்நாள் இந்திய வசூலை முறியடித்து சாதனைப் படைத்துள்ளது.
மார்வெல் ஸ்டுடியோவும், கொலம்பியா பிக்சர்ஸும் இணைந்து தயாரித்துள்ள ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் திரைப்படம் கடந்த 16 ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. க்ரிஷ் மெக்கன்னா, எரிக் சோமர்ஸ் எழுத, ஜான் வாட்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.
ஸ்பைடர் மேன் சீரிஸின் ஸ்பைடர் மேன் - ஹோம் கமிங் (2017), ஸ்பைடர் மேன் - ஃபார் ப்ரம் ஹோம் (2019) ஆகிய படங்களின் தொடர்ச்சியாக ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் வெளியான நிலையில் இந்த வருடம் இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களில் இந்தப் படத்துக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவியது.
இதனால் படம் வெளியாவதற்கு எட்டு தினங்களுக்கு முன்பே சில திரையரங்குகள் முன்பதிவை தொடங்கின. இந்தியாவில் 2டி, 3டி, ஐமேக்ஸ் ஆகிய மூன்றுவித பார்மெட்களில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இதனால் ஸ்பைடர் மேன் முந்தைய அவென்ஜர்ஸ் படங்களின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. 2018ல் வெளியான அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் இந்தியாவில் முதல் நாளில் 31.30 கோடிகளை வசூலித்தது. 2019ல் வெளியான அவென்ஜர்ஸ் என்ட்கேம் இந்தியாவில் முதல் நாளில் 53.10 கோடிகளை வசூலித்தது.
இந்நிலையில் ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் படம் முதல் நாளில் 41.50 கோடிகளை வசூலித்துள்ளது. இது அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் முதல்நாள் வசூல் 31.30 கோடிகளைவிட அதிகம்.இந்த வருடம் வெளியான ஹாலிவுட் படங்களில் எட்டர்னல்ஸ் 19 கோடிகளை வசூலித்ததே அதிகபட்ச முதல்நாள் வசூலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.