’என் பேச்சை மாற்றி புகார் அளித்துள்ளார்கள்’ - தேர்தல் ஆணையத்தில் உதயநிதி பதில்

election tamilnadu stalin udayanidhi
By Jon Apr 08, 2021 03:05 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி பற்றிய பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது. தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது உதயநிதி ஸ்டாலின், “சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மரணத்துக்கு பிரதமர் மோடியின் அழுத்தம் காரணம்” என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது.

இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில், 'என் தாய் பாஜகவில் சிறப்பாக நடத்தப்பட்டார். உங்கள் அரசியலுக்காக அவரை இழுக்காதீர்கள்' என சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து அருண் ஜெட்லியின் குடும்பத்தினரும் உதயநிதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருந்த உதயநிதி ஸ்டாலின், 'சீனியர்களை ஓரங்கட்டி குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்ததாக பிரதமர், தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் என்னை விமர்சித்தார். சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் பிரதமர் ஆனவர் நீங்கள்தான் என்று வேறொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவருக்கு பதிலளித்தேன்” என்றார்.

இந்நிலையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையிலான குழு இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் புகார் அளித்தது. அதில், 'உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறான கருத்து மட்டுமல்ல, மக்களை திசை திருப்ப இதுபோன்ற அவதூறுகளைப் பேசியுள்ளார்.

தேர்தலுக்குச் சற்றும் தொடர்பே இல்லாத அடிப்படையே இல்லாத, பொய்யான கருத்துகளைப் பேசி பிரதமரின் தனிப்பட்ட வாழ்க்கையையும், மறைந்த முன்னாள் அமைச்சர்களையும் விமர்சித்துள்ளார், இது தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். எனவே அவரைத் தேர்தலில் நிற்காதபடி தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது. இந்தப் புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம் இது தொடர்பாக இன்று (7.4.2021) மாலைக்குள் விளக்கமளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது.

அதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில் தேர்தல் ஆணையத்தில் தன் மீது அளிக்கப்பட்ட புகாரை மறுப்பதாகத் தெரிவித்துள்ளார். தான் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். தன் மீதான புகார் குறித்த உரிய முழு தகவலை அளித்தால் மட்டுமே தான் விளக்கம் அளிப்பதற்கான சரியான வாய்ப்பளிக்கப்பட்டதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கவோ, அவதூறு கருத்துகளையோ தான் பேசவில்லை என்றும், தனது தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் திரித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. நான் பேசிய முழு தமிழ் வார்த்தைகள் வேறு. தங்களிடம் புகாராகக் கொண்டுவரப்பட்டது வேறு. பேச்சின் முழு தமிழ் வார்த்தைகளையும் அளித்தால் சரியாக இருக்கும். நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள அழுத்தம் என்கிற வார்த்தையை நான் உபயோகப்படுத்திய விதம் வேறு.

ஆனால், தவறாக அர்த்தம் கற்பித்துப் புகார் அளித்துள்ளனர்.” என்றார். மேலும், ”நான் தாராபுரத்தில் என்ன பேசினேன் என்பதை ஏப்.2 அன்று சிங்காநல்லூர் கூட்டத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளேன். ஆகவே, என்னுடைய இரண்டு வார்த்தைகளை வைத்து என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனக்கு வாய்ப்பளித்தால் முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயாராக உள்ளேன்' என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.