11 நாட்கள் - பிரதமர் மோடி வழிபாடு நடத்திய கோவில்களின் சிறப்புக்கள் என்னென்ன..?
ராமர் கோவிலை திறந்து வைப்பதற்கு முன்பாக நாட்டின் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதத்தை கடைபிடித்து வருகின்றார்.
விரதம்
அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று மிக பிரமாண்டமாக நடைபெறுகின்றது. ராமர் சிலையின் பிரதிஷ்டை செய்ய நாட்டின் பிரதமர் மோடி கடந்த 11 நாட்களாக விரதமிருந்து வருகின்றார்.
முதலில் அவர், மகாராஷ்டிரா மாநில காலாராம் கோவிலில் சென்று தனது விரதத்தை துவங்கினார். 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோவிலில் அமைந்திருக்கும் ராமரின் சிலை சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
இக்கோவிலை தொடர்ந்து பிரதமர் மோடி, ஆந்திர மாநிலம் லேபக்ஷி கோயிலில் வழிபாடு நடத்தினார். ராமாயண இதிகாசத்தில், சீதை கடத்தப்பட்ட போது அதனை தடுக்க போராடிய ஜடாயு அடிபட்டு விழுந்த போது, ராமர் ஜடாயுவின் நிலையை கண்டு எழுந்திருக்கும்படி பறவையிடம் கூறிய இடம் இது என நம்பப்படுகிறது. தெலுங்கில் லே என்றால் எழுந்திரு என்றும் பக்ஷி என்ற பறவை என்றும் பொருள்.
இந்த கோவிலை அடுத்து கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படும் இக்கோவில், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே கிருஷ்ணர் தோற்றமளித்தார் என்று கூறப்படுகிறது.
அடுத்து தமிழ்நாட்டின் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில். விஷ்ணுவின் 108 திவ்யதேசங்களின் முதல் தலமான இக்கோவிலில், வழிபட்ட பிரதமர் கம்பராமாயண பாராயணத்தை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர், அங்குள்ள 21 புனித கிணறுகளில் உள்ள நீரிலும், அக்னி தீர்த்த கடலிலும் புனித நீராடி, வழிபாடு மேற்கொண்டார்.
நேற்று(21-01-2024) நாட்டின் தென் கொடியான அரிச்சல் முனையில் வழிபட்ட பிரதமர் மோடி, தனது 3 நாள் தமிழ்நாடு பயணத்தை முடித்து கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.