தென் மாவட்ட மக்களுக்கு வெளியானது சூப்பர் அறிவிப்பு - அப்போ தீபாவளி ஜாலி தான்..!
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் பயணம் செய்ய தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் தீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் முன்பதிவு செய்ய முடியாதவர்களின் வசதிக்காக தீபாவளிக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நாளை முதல் (நவம்பர் 3) தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாளை இரவு 10. 05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06037) தீபாவளி அன்று காலை 11:00 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலியில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 5 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06038) நவம்பர் 6 ஆம் தேதி காலை 5:20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் சிறப்பு நிறுத்தமாக அரியலூர் மற்றும் மாம்பலம் நிலையத்தில் நின்று செல்லும்.
மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை வரும் மக்களுக்காக திருநெல்வேலி - சென்னை தாம்பரம் வரையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், 7 ஆம் தேதி மாலை 7மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும்.சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.